நீலகிரியில் சற்று குறைந்தது மழையின் தாக்கம்: சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

கல்லட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் சேதமடைந்த சாலை. (அடுத்த படம்) முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
கல்லட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் சேதமடைந்த சாலை. (அடுத்த படம்) முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
Updated on
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் ஊட்டி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாது மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன.

தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மரங்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பார்சன்ஸ் வேலி பகுதியில் மரங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு, ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மின் வாரியத்தினர் தொடர்ந்து மின் இணைப்பை சீரமைத்து வருகின்றனர். இதனால், 5 நாட்களாக ஊட்டி நகருக்கு தண்ணீர் வரவில்லை.

கல்லட்டி - மசினகுடி சாலையில் நேற்று முன்தினம் ராட்சத பாறை சாலையில் உருண்டு விழுந்ததால் தார் சாலை பழுதடைந்தது. இதனால் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. நேற்று நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையை சீரமைத்து, வாகனப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் காற்றின் வேகம் மற்றும் மழையின் தாக்கம் குறைந்ததால் மூடப்பட்டிருந்த ஊட்டி பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதனால், அறைகளில் முடங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியே வந்து ஊட்டி பூங்காவை பார்வையிட்டனர்.

ஆனால், வனத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரப் படகு இல்லம் நேற்று திறக்கப்படவில்லை.

கூடலூர் பகுதியில் தர்மகிரி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய புதிய கார் நேற்று மீட்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் முத்திரை பாலாடா உட்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால், மாயாறு, பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் புத்தூர் வயல் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 256 மி.மீ. மழை பதிவானது. எமரால்டில் 132, அப்பர் பவானி 123, சேரங்கோடு 100 மி.மீட்டர் மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in