

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாகின்றன. இதில் திமுக சார்பில் 4 வேட்பாளர்களையும், அதிமுக சார்பில் 2 வேட்பாளர்களையும் நிறுத்துகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் காங்கிரஸூக்கு ஒரு இடத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த முடிவை ஸ்டாலின் ஏன் எடுத்தார் என திமுக வட்டாரங்களில் கேட்டபோது, "ஆட்சியில், அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
தவெகவுடன் கூட்டணி என தேர்தல் நேரத்தில் நேர பேர வலிமையை காங்கிரஸ் உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே, மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்றை காங்கிரஸூக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருப்பார்" என்றனர்.
காங்கிரஸூக்கு ஒரு இடம் என்பதை காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ள நிலையில், அந்த வாய்ப்பை பெற, மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், "இவர்கள் அனைவரும் காங்கிரஸில் பதவி சுகம் அனுபவித்தவர்கள். சிலர் தங்கள் வாரிசுகளையும் அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டனர். அதனால் தொடர்ந்து அவர்களுக்கே ஏன் பதவிகள் சென்று சேர வேண்டும். கட்சியை வளர்க்க உழைத்துக் கொண்டிருக்கும் புதுமுகங்களுக்கு கட்சித் தலைமை வாய்ப்பளிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.