

சென்னை: தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பருவமழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற அறிவுறுத்தினார்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மழைநீர் வடிகால் பணிகள், சென்னை பெருநகர மாநகராட்சியால் மேம்பாட்டு பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நீர்வழிக் கால்வாய்கள், குளங்கள் மறுசீரமைக்கும் பணிகள், 2024 வடகிழக்கு பருவமழையின்போது நீர்தேங்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), வனத்துறை, சென்னை பெருநகர கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகள் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கலந்துரையாடி பணிகள் விரைவாக முடிவடைய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பருவமழையால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் களப்பணியாற்றி அரசுக்கு நற்பெயர் பெற்றுத் தரவேண்டும் என்றும் உதயநிதி அப்போது கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துணை மேயர் மு.மகேஷ் குமார், துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.