'நான் முதல்வன்' திட்டம் மூலம் தென்கொரியாவில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள்​

'நான் முதல்வன்' திட்டம் மூலம் தென்கொரியாவில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள்​
Updated on
1 min read

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சிபெற்ற 6 மாணவ, மாணவிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ், பயோமெடிக்கல் மற்றும் நானோ பொருட்களின் ஆற்றல் பயன்பாடுகள், சூரிய மின்கல தொழில்நுட்பம் மற்றும் நிலையான ஆற்றல் கண்டுபிடிப்புகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி பயிற்சிக்காக 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பயிற்சிக்காக அரசு செலவில் தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

2 வாரம் சிறப்பு பயிற்சி: வேதியியல் பிரிவைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் தென்கொரியாவின் கச்சோன் பல்கலைக்கழகத்தின் பயோ – நானோ பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், மே 9 முதல் 24-ம் தேதி வரை பயிற்சி பெற்றனர். அதேபோல், இயற்பியல் துறையைச் சேர்ந்த 2 மாணவர்கள பூசன் தேசிய பல்கலைக் கழகத்தின் மேம்பட்ட நிலையான எரிசக்தி ஆய்வகத்தில் பயிற்சி பெற்றனர்.

இந்த சிறப்பு பயிற்சியின் காரணமாக, அவர்களுக்கு தென்கொரியா நாட்டின் கச்சோன் மற்றும் பூசன் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் நெகிழ்ச்சி: இந்நிலையில், 2 வார பயிற்சியை முடித்து தமிழகம் திரும்பிய 6 மாணவ, மாணவிகள் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் கலந்துரையாடிய துணை முதல்வர், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும், பயிற்சி அனுபவம் குறித்தும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in