சென்னை கொளத்தூர், பழநி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை கொளத்தூர், பழநி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்
Updated on
2 min read

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.118.33 கோடி மதிப்பில் கொளத்தூர், பழனி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், குளம், பூங்கா மற்றும் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கொளத்தூரில், தேவி பாலியம்மன், இளங்காளியம்மன் கோயில் சார்பில் ரூ.8.88 கோடியில், 27.525 சதுரடி பரப்பில், 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் உறைவிடம் கட்டப்படுகிறது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் ரூ.8.48 கோடியில், 38,750 சதுரடியில், 100 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலும் திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில் சார்பில் ரூ.5.25 கோடி மதிப்பில், பாளையங்கோட்டையில் 15,473 சதுரடி பரப்பில் 50 மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையிலும் உறைவிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த 3 உறைவிடங்கள் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயிலுக்கு ஓதுவார் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி எஸ்.எஸ்.பிரியவதனாவுக்கு முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதையடுத்து, ஜி.கே.எம். காலனி பிரதான சாலை, அரிச்சந்திரா மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள், 131 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் 100 பயனாளிகளுக்கு கண்ணாடிகளை முதல்வர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, ஜி.கே.எம். காலனி 24ஏ தெருவில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதியின்கீழ் ரூ.2 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரம் செலவில் ஜெனரல் குமாரமங்கலம் குளத்தினை ஆழப்படுத்தி, புதிதாக குளக்கரை, நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.1. 47 கோடியில் இறகுப்பந்தாட்ட விளையாட்டுத் திடல், யோகா மேடை, செயற்கை நீரருவி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவையம் முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 318 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவித்து, புத்தகப் பை, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். பெரியார் நகர் 4-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 150 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.47 கோடியில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார்.

அதன்பின், குமரன் நகர் 80 அடி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் மற்றும் மாதவரம் வட்டத்தில் ரூ.91.36 கோடியில் மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் உபரிநீர் கால்வாயை திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டிய திட்டங்கள் மற்றும் திறந்து வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.118.33 கோடியாகும். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in