

விருதுநகர்: விருதுநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் நான்குவழிச் சாலையில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குவாலியரை தலைமையிடமாகக் கொண்ட பரிவார் டெய்ரிஸ் அன்டு அலைடு லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் கிளை விருதுநகர் மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில், பொதுமக்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.
இதை நம்பி குறைந்தபட்சம் ரூ.100 முதல் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தவணையாக வசூலிக்கப் பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் இந்நிறுவனம் மூடப்பட்டது. பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அந்நிதி நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, நிறுவனத்தின் சொத்துக்களை சிபிஐ பறிமுதல் செய்யவும், அவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய தொகையை திருப்பி வழங்கவும் உத்தரவிட்டது.
அதையடுத்து, சென்னை சிபிஐ அதிகாரிகள் தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது, பணம் செலுத்தியவர்களிடம் இருந்து அதற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பெறும் முகாம் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக மேல் தளத்தில் மே மாதம் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என சிபிஐ அறிவித்தது.
அதன்படி, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சென்னை சிபிஐ ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து ஆவணங்களை சரி பார்த்து வந்தனர். நாள் ஒன்றுக்கு சுமார் 200 பேரின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் ஆவணங்களை சமர்ப்பிக்க குவிந்தனர்.
இதனால், சிபிஐ அதிகாரிகள் திணறினர். ஆவணங்களை சரி பார்க்க சிபிஐ அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மதுரை- விருதுநகர் நான்குவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மேற்கு போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து அனைவரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீஸார் மற்றும் சிபிஐ ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்டோர் பொறுமையாக வரிசை யில் வந்தால் மட்டுமே தங்களால் ஆவணங்களை சரி பார்க்க முடியும் என்றும், மீண்டும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி முகாம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் சமாதானம் அடைந்தனர்.