

சென்னை: சென்னை மாநகரம் அடிக்கடி பேரிடர்களை சந்திப்பதால், மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை மாநகராட்சிக்கென தனி பேரிடர் மேலாண்மை குழுமத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிமீ பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. மாநகராட்சியின் மக்கள்தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 66.72 லட்சம்; தற்போதைய மக்கள்தொகை சுமார் 85 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. மாநகராட்சியின் எல்லைக்குள் 22 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்கள் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளாக உள்ளன.
இப்பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிலோ மீட்டரில் சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த மாநகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 100 செமீ-க்கும் அதிகமாக மழை பெய்து வருகிறது. தற்போது மாநகரில் கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன. கிடைக்கும் மழை அளவு குறையாவிட்டாலும் மழை பெய்யும் நாட்கள் குறைந்து, குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
அவ்வப்போது மேக வெடிப்பும் ஏற்பட்டு, சில மணி நேரங்களில் 21 செமீ-க்கும் அதிகமான மழை பெய்துவிடுகிறது. இக்காரணங்களால் இதற்கு முன்பு சென்னையில் எப்போதாவது ஏற்பட்ட பெருவெள்ளம், ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது பரிமாணங்களில் பேரிடர்கள் வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது.
2023-ம் ஆண்டு உருவான `மிக்ஜாம்' புயல், சென்னையை நெருங்கி வந்து, மழைநீரை கடல் உள்வாங்காத நிலையை ஏற்படுத்தி, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. `வார்தா' போன்ற புயல்கள் வந்து, பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து விடுகின்றன. சில நேரங்களில் வெப்ப அலை ஏற்பட்டு மக்களை வதைக்கிறது.
இதுபோன்று சென்னை பாதிக்கப்படும்போது, மாநிலத்துக்கென பொதுவாக உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை விதிகள் பயனற்று போகின்றன. அதனால் மாநகருக்கென தனி பேரிடர் மேலாண்மை குழுமம் ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
குழும உறுப்பினர்கள்: அதன்படி, சென்னை மாநகராட்சி ஆணையரை தலைவராகவும், மாவட்ட ஆட்சியரை துணைத் தலைவராகவும் கொண்ட `சென்னை மாநகர நகர்ப்புற பேரிடர் மேலாண்மை குழுமம்' ஒன்றை அரசு அமைத்து, அது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதில் சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்), மாநகர நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அலுவலர், சென்னை மண்டல நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.