அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்ல வேண்டும்: செல்வப்பெருந்தகை

அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்ல வேண்டும்: செல்வப்பெருந்தகை
Updated on
1 min read

திருச்சி: மாநிலங்களை மத்திய அரசு அரவணைத்து செல்ல வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி புத்தூரில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகர் சிவாஜி சிலைக்கு நேற்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக புறக்கணித்து உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுவது சர்வாதிகாரம்.

காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார். இருந்தபோதும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வழங்கியது.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

கலவர பூமியாக்க திட்டம்: ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. மதரீதியாகவும், சாதிரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-ன் அஜெண்டா. அதைதான் பாஜக தொடர்ந்து செய்கிறது. காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களைக் கொண்ட கட்சி.

பெரியார் தன்னுடைய சாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால், அவரை சாதி அடையாளத்துடன் குறிப்பிட்டு யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழகத்தை கலவர பூமியாக்கும் பாஜகவின் திட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.

இண்டியா கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இது தமிழக மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. தமிழகத்தை கடந்து தேசத்தை பாதுகாக்கும் கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in