

சென்னை: போலீஸ் எஸ்ஐ-க்கான தேர்வு வழக்கமான முறையில் நடைபெறுமா அல்லது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி புதிய முறையில் நடைபெறுமா என 3 லட்சம் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்ஐ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் எஸ்ஐ தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது.
காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் ஒழுங்கு, உளவியல் தொடர்புடைய கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் ஏற்கெனவே உடல் தகுதியை நிரூபித்து காவல் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால் உடல் தகுதி தேர்வு கிடையாது. ஆனால், பொதுப் பிரிவில் வருபவர்களுக்கு கூடுதலாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு சட்டம் தொடர்பான கேள்விகள் இருக்காது.
பொதுப்பிரிவு மற்றும் பணியில் உள்ள போலீஸாருக்கு தனித்தனி தேர்வு மற்றும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்படும். அதில் தேர்வானவர்களுக்கு எஸ்ஐ பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும். அனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் அனைவரும் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெறுவார்கள். இதுவரை இப்படிதான் நடந்து வருகிறது.
ஆனால், அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என்ற வகையில் தீர்ப்பு வழங்கியது. அப்படி பார்த்தால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, வழக்கம்போல் தனித்தேர்வாக நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பழைய முறைப்படி சீனியாரிட்டி வழங்கப்படுமா அல்லது ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண் என்ற வகையில் தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மொத்த பேரும் சீனியாரிட்டி அடிப்படையில் வைக்கப்படுவார்களா என சுமார் 3 லட்சம் தேர்வர்கள் குழம்ப நிலையில் உள்ளனர்.
இதுதவிர எதிர்பார்த்தபடி அடுத்த மாதம் 28, 29-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும். ஆனால், எந்த முறையில் நடைபெறும் என இதுவரை உறுதியாகவில்லை என்றனர். எஸ்ஐ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதன் பின்னரே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.