இடுக்கியில் கனமழை வெள்ளம்
இடுக்கியில் கனமழை வெள்ளம்

மூணாறில் மண்சரிவு அபாயம்: இரவு நேரத்தில் மாற்று பாதையில் பயணிக்க உத்தரவு

Published on

போடி: மூணாறில் கனமழை பெய்து கேப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரத்தில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று இடுக்கி ஆட்சியர் விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட தமிழக எல்லையில் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான இங்கு தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு மலைகளை உடைத்தே பல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம்.

இதில் தேவிகுளத்தில் இருந்து பூப்பாறை செல்லும் சாலையான கேப் ரோடு எனும் இடம் மண்சரிவு அபாயப் பகுதி பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு மழையின் போதும் இங்கு மண்சரிவும், பாதிப்பும் அதிகம் ஏற்படும். தற்போது கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆகவே இப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றுப்பாதையான பூப்பாறையில் இருந்து பள்ளிவாசல், ராஜாக்காடு, ராஜகுமாரி, தேவிகுளம் வழியே வாகனங்கள் மூணாறு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மோசமான காலநிலை இடுக்கியில் நிலவி வருவதால் மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் வரவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in