

மதுரையில் திமுக-அதிமுக நிர்வாகிகள் இடையே தேர்தல் பணியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இருதரப்பினரும் கட்சியினருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கத் தொகைகளையும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபிறகு கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக-வுக்கு இணையாக அதிமுக 5 தொகுதிகளை கைப்பற்றியது. மாநகர் பகுதியில் திமுகவும், புறநகர் பகுதியில் அதிமுகவும் செல்வாக்கு காட்டின. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையில் மாநகர் பகுதியில் திமுக பலவீனமாக உள்ளதாகவும், புறநகர் பகுதியில் திமுக பலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே மாநகர் பகுதியில் மதுரை மேற்கு தொகுதி, அமைச்சர் பி.மூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுகவினர், தற்போதே ‘பூத்’ கமிட்டி அமைத்து, தேர்தல் களப்பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். வரும் ஜூன் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை உத்தங்குடியில் நடக்கும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்க வருகின்ற போதே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்க உள்ளதாகவும், அதற்கான முன்னோட்டமாகவே, முந்தைய நாள் ‘ரோடு ஷோ’வும், அன்று இரவு அமைச்சர்கள் மற்றும் மாநகர, புறநகர் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் இந்த தீவிர தேர்தல் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்கவும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை கைப்பற்றவும், மதுரையில் அதிமுகவின் முகங்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா போன்றோர், தங்கள் மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகள்வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். உள்ளூர் இளைஞர்களை கவர கிரிக்கெட் போட்டி, கபடி போட்டிகளை நடத்தி ‘பரிசு’கள் வழங்கி வருகின்றனர்.
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் தொகுதியில் கடந்த 3 மாதங்களாக முகாமிட்டு, ஜெ. பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி முடித்துள்ளார். திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளை கவுரவித்து அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும், ஊக்கத் தொகைகளையும் வழங்கி வருகிறார். வி்.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். ஒன்றிய பொறுப்புகளில் மகனின் வழிகாட்டுதலில் இளம் நிர்வாகிகளை நியமனம் செய்து, தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
செல்லூர் கே.ராஜூ, மேற்குத் தொகுதியில், வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுக கவுன்சிலர்களை தொகுதிக்குட்பட்ட குடியிருப்புகளில் களம் இறக்கிவிட்டு, வீடு வீடாக அவர்களை அனுப்பி அதிமுகவுக்கு திண்ணைப் பிரச்சாரம் செய்ய வைத்து வருகிறார்.
அமைச்சர் பி.மூர்த்தி, மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் சமீப காலங்களில் ரூ.100 கோடி அளவுக்கு வளர்ச்சித் திட்டப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சமீபத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, தொகுதி முழுவதும் புதிய சாலைகளை அமைத்து, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார். கிழக்கு, மேற்கு தொகுதிகளில் வாரந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகளை அறிவித்து நடத்தி, கறி விருந்து நடத்தி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து தனது 4 ஆண்டு கால சாதனை பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி, வார்டு செயலாளர்களையும், கவுன்சிலர்கள் மூலம் தனது தொகுதியில் சத்தமில்லாமல் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் களம் சூடு பிடிப்பதற்கு முன்பே, மதுரை மாவட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையேயான தேர்தல் ‘யுத்தம்’ தொடங்கி விட்டது. ஆனால், மறந்தும்கூட, திமுக, அதிமுக இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்காமல் மிக பாதுகாப்பாக அரசியல் செய்து வருவது, அவர்களுடைய திரை மறைவு நட்பை காட்டுவதாக இரு கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக் கின்றனர்.