சென்னையில் தரமற்ற உணவை விநியோகித்த உணவகம், ஜொமாட்டோவுக்கு ரூ.30,000 அபராதம்

சென்னையில் தரமற்ற உணவை விநியோகித்த உணவகம், ஜொமாட்டோவுக்கு ரூ.30,000 அபராதம்
Updated on
1 min read

சென்னை: தரக்குறைவான உணவு விநியோகத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகத்துக்கு சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் ஜொமாட்டோ மூலம் அசைவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட பின்னர் ஜெகபிரபுக்கு மூச்சுத்திணறல், தலைச் சுற்றல், மாரடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ஜெகபிரபு, இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

இதனையடுத்து, அந்த உணவகத்தில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதை கண்டறிந்து 2,000 ரூபாய் அபரதாம் விதித்தனர். இந்நிலையில் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ஜொமாட்டோ மற்றும் அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸுக்கு உத்தரவிடக்கோரி ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in