

சென்னை: சிபிஐ சோதனை நடத்தி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என தமிழக பாஜக தலைவர் விமர்சித்துள்ளார்.
மோடிக்கும் பயமில்லை, ஈடி-க்கும் பயமில்லை என்ற துணை முதல்வர் உதயநிதியின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடிக்கும் பயமில்லை, ஈடி-க்கும் பயமில்லை என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று துணை முதல்வர் உதயநிதி நினைக்கிறார். தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை எதற்காக தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா?
2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின்போது, கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சிபிஐ சோதனை செய்ய, கீழே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா, அன்று பயம் காட்டி பேரம் செய்தது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசு தான்.
பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜகவோ அல்ல. அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள்.
அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று உதயநிதி அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறதுபோல.
திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே. நீதியானது நிச்சயம் இறுதியில் அவர்களது எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் சந்தேகமுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.