அரசு தலைமை காஜி மறைவு: தலைவர்கள் இரங்​கல்

அரசு தலைமை காஜி மறைவு: தலைவர்கள் இரங்​கல்

Published on

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுதீன் முகமது அயூப் மறைவையெய்திய நிலையில், அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைமை காஜியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக நவாப்களின் நீதிமன்றத்தில் திவானாக பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன் முகமது அயூப். அவர் எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல்இஜாசதுல் ஆலியா பட்டத்தைப் பெற்றவர். அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்ஏ, எம்ஃபில், முனைவர் பட்டங்களை பெற்றிருந்தார்.

சென்னை புதுக்கல்லூரியில் அரபு பேராசியராக இருந்தவர், தந்தை காஜி முகமது அஜீசுதீனை பின்பற்றி 40 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டார். அவர் தனது 84-வது வயதில் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல், ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் நேற்று மாலை ஜனாஸா தொழுகையைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள தர்கா ஹஸ்ரத் தஸ்தகீர் சாஹிபில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைமை காஜியின் மறைவையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் இரங்கல் செய்தியில், "தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் மறைவால் ஆழ்ந்த துயரமுற்றேன். புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மற்றும் இரக்கம் நிறைந்த தலைவராக அவர் விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் அஞ்சலி: மறைந்த தலைமை காஜியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

முன்னதாக முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த இரங்கல் செய்தியில், "தலைமை காஜியின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

தலைமை காஜியின் மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in