

சென்னை: அரசியல் நிலைப்பாடு வேறு, நாட்டு நலன் கருதி அரசுடன் ஒத்துழைப்பது வேறு. அந்த வகையிலேயே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிலையை பிரதமரிடம் தெரிவித்தேன். நாட்டு நலன், மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல், இப்போது கலந்து கொள்வது ஏன்? டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார்’ என்றெல்லாம் அரசியல் எதிரிகள் கற்பனை சிறகுகளை பறக்கவிட்டனர்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்கும் கூட்டம் என்பதாலும், நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மிக முக்கியமானதாக நிலைபெற்றுள்ளதாலும், அந்த கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்தேன். கூட்டத்தில் பங்கேற்ற பல மாநில முதல்வர்களையும் பிரதமர் வரவேற்றார். அவர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினர்.
மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இல்லை என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கூட்டமும் அதற்கேற்ற வகையில் இருந்தது. வரும் 2045-ம் ஆண்டில் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என இந்தியா இலக்கு வைத்துள்ள நிலையில், அதில் தமிழகத்தின் பங்களிப்பு 4.5 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்பதை பிரதமரிடம் தெரிவித்தேன்.
அதாவது, ‘இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு தற்போது உள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயரும். அதற்கேற்ற மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு முன்னெடுத்துள்ளது’ என்பதை பெருமையுடனும், நம்பிக்கையுடனும் தெரிவித்தேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கம். அதுபோலவே, நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது, சமரசம் இல்லாமல் நாட்டின் ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாக, அண்ணா காலத்தில் இருந்தே திமுக இருந்து வருகிறது.
கருணாநிதியும் அதே வழியை மேற்கொண்டார். அதே வழியில்தான், ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி அப்பாவி சுற்றுலா பயணிகளை ஈவிரக்கமின்றி கொன்ற தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்ததுடன், தீவிரவாத ஒழிப்புக்காக இந்திய ராணுவம் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் என் தலைமையில் பேரணியும் நடைபெற்றது.
அரசியல் நிலைப்பாடு வேறு, நாட்டு நலன் கருதி அரசுடன் ஒத்துழைப்பது வேறு. அந்த வகையிலேயே, நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிலையை தெரிவித்தேன். தமிழகத்துக்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் பிரதமரிடம் நேரடியாகவே வலியுறுத்தினேன். நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல, மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட உரிமை. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானது. அதில் சமரசம் இன்றி, நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு வருகிறோம். அமலாக்க துறை, வருமான வரி துறை, சிபிஐ போன்றவை திமுகவினரை குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்த கட்சியையும் குறிவைத்தது இல்லை. அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டம் மூலம் வென்று வருகிறோம்.
மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் குறித்த எஃப்ஐஆர்கள் தொடர்பாக அமலாக்க துறை நடத்திய சோதனைக்கு திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும். அமலாக்க துறை நடவடிக்கைகள் சட்டமீறல் என்பதை உச்ச நீதிமன்ற கருத்துகள் மூலம் திமுக அரசு உறுதி செய்துள்ளது. மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெறும் கட்சி பொதுக்குழுவில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.