கோவையில் ஆறு, குளங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கோவை: கோவை மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து, வால்பாறை மற்றும் டாப்சிலிப் பகுதியில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து வந்துள்ள புகார்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறும்போது, பொதுமக்கள் ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஜெனரேட்டர்கள், 100 ஜெ.சி.பி, வாகனங்கள், 50 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கனமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது” என்றார்.
