

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை வாயில் கருப்பு துணி கட்டி அக்கட்சியின் ஒரு பிரிவினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜவில் மையக்குழு பொறுப்பாளர் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் அண்மையில் நடந்ததாகவும், அந்த பதவியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றும் இது குறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக அலுவலகத்தை வாயில் கருப்பு துணி கட்டி முற்றுகை போராட்டம் நடத்துவதாக ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் சில இடங்களில் கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக பொருளாதாரப் பிரிவு முன்னாள் மாவட்டத்தலைவர் பிரபு என்பவர் தலைமையில் அக்கட்சியின் ஒரு பிரிவினர் ராமநாதபுரம் மாவட்ட பாஜ அலுவலகத்தை வாயில் கருப்பு துணி கட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பாஜவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜவில் தேசிய அளவில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் மாவட்ட, மாநில அளவில் பிரதிநிதித்துவம் அளிக்க மறுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கு முறையாக தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக முன்கூட்டியே தெரிவித்தோம். ஆனால் அதற்கு சமாதானம் செய்யாமல், வேண்டுமென்றே புறக்கணித்து, அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனை கண்டித்தும், இந்த போராட்டத்தை நடத்துவதாகவும், விரைவில் மாவட்ட பாஜவை கண்டித்து சமுதாய மக்களுடன் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என கூறினார்.