''குடும்ப நலனுக்காக பாஜகவிடம் திமுக தலைமை அடைக்கலம்...'' - விஜய் விமர்சனம்

''குடும்ப நலனுக்காக பாஜகவிடம் திமுக தலைமை அடைக்கலம்...'' - விஜய் விமர்சனம்
Updated on
2 min read

சென்னை: “குடும்ப நலத்துக்காக தமிழக மானத்தை அடகு வைத்து மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டது” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்கள் பலரை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் எங்கு பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றார்போல் அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம். சென்ற ஆண்டு நடைபெற்ற கூட்டத்துக்கு செல்லாதற்கு முதல்வர் முன்வைத்த காரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்க இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்?

உண்மையிலேயே பிரதமருடனான சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும், குடும்பத்துக்காகவும் எதுவும் பேசவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் மனசாட்சியுடன் வெளிப்படையாக கூற முடியுமா?

தமிழக முதல்வர் தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், திமுகவை அரசியல்ரீதியாக கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில் பாஜகவால் எப்படி இவர்களை கொஞ்சி குலாவி வரவேற்க இயலும்? நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள் உள்ள மறைமுக கூட்டின் வெளிப்பாடு.

நிதி ஆயோக் கூட்ட புகைப்படத்தில் பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படுகிறது. முன்வரிசையில் ஒருபுறம் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவும், மற்றொரு மறைமுகக் கூட்டணியான மு.க.ஸ்டாலினும் நிற்கின்றனர். திமுக, பாஜக இடையேயான மறைமுக கூட்டும், பேர அரசியலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.

மத்திய பாஜக அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, மாநில முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன் பறக்கவிடுவதும், ஆளுங்கட்சியான போது கைகுலுக்கி காலில் விழுவதுமே கபட நாடக திமுக தலைமையின் பித்தலாட்ட அரசியலாக இருக்கிறது.

கூட்டத்துக்கு சென்றது மாநிலத்துக்கான நிதியை பெறுவதற்கு அல்ல. குடும்ப வாரிசு நிதியை காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே. குடும்ப சுயநலத்துக்காக தமிழக மானத்தை அடகு வைத்து மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டது.

வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பதை அறிந்த திமுக, மத்தியில் ஆளும் பிளவுவாத பாஜகவுக்கு சாமரம் வீசியாவது காலத்தை ஓட்டலாம் என நினைக்கிறது. வரும் காலத்தில் பாஜகவுடன் நேரடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு நெடுஞ்சாண்கிடையாக திமுக சரணாகதி அடைந்துள்ளது.

இந்த அவலமான திமுக அரசின் ஊழல் பெருச்சாளிகள் தமிழக மக்களால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, மக்கள் ஆதரவோடு தவெக உண்மையான மக்களாட்சியை அமைக்கும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in