ஊட்டி அருகே மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஊட்டி அருகே மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
Updated on
2 min read

ஊட்டி: ஊட்டி அருகே மரம் விழுந்து கேரளாவை சேர்ந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு வீரர்கள், வருவாய்த் துறையினர் என ஒட்டுமொத்த அரசுத் துறைகளும் களத்தில் நின்று முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்ட பெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம், பைக் காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் மக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் சுற்றுலாப் பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்புமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

சிறுவன் உயிரிழப்பு: இந்நிலையில், இன்று மதியம் சுமார் 1 மணியளவில் பைக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டாவது மைல் என்னும் இடத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலம், முகேரி வடகரையை சேர்ந்த பிரசித் என்பவரது மகன் ஆதி தேவ் (15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட தீயணைத் துறையினர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, ”கேரள மாநிலம் கேலிகட் பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் இன்று காலை 8-வது மைல் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக திடீரென மரம் ஒன்று முறிந்து 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆதி தேவ் மீது விழுந்துள்ளது.

பலத்த காயம் ஏற்பட்ட சிறுவனை ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல்‌ பலரும் நடமாடி வருகின்றனர். அவசிய தேவைகளைத் தவிர வெளியில் நடமாடுவதை இரண்டு நாட்கள் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in