

கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
பின்னர், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 49.50 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் நேற்றைய (மே 24) நிலவரப்படி நீர்மட்டம் 19.02 அடியாக இருந்தது.
இந்நிலையில், இன்று (மே 25) அணையின் அடிவாரப் பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 21.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையில் 85 மி.மீ அளவுக்கும், அடிவாரப் பகுதியில் 73 மி.மீ அளவுக்கும் மழை பெய்துள்ளது. அணையில் இருந்து இன்று 67.84 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 100 அடி. 97.5 அடியை கடந்தால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும். பில்லூர் அணையில் நேற்று (மே 24) நிலவரப்படி 78 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. நேற்று இரவு பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 8 அடி உயர்ந்து 86 அடியாக பில்லூர் அணையின் நீர்மட்டம் இருந்தது. அணைக்கான நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது.
அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து இன்று மின் உற்பத்திக்காக 6,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இன்று நீரோட்டத்தின் வேகம் அதிகளவில் இருந்தது. இதனால் பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, துவைக்கவோ வேண்டாம் என அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கரையோர மக்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தனர். அணைக்கான நீர்வரத்து அதிகளவில் இருப்பதால், அடுத்த சில தினங்களில் பில்லூர் அணை நிரம்ப வாய்ப்புகள் உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.