Published : 25 May 2025 12:36 AM
Last Updated : 25 May 2025 12:36 AM

“நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்” - மெட்ரோ நிதி குறித்து பிரதமர் கூறியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை, எஸ்எஸ்ஏ திட்ட நிதி விடுவிப்பது ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்துக்குப்பின், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும், என்ன நிலுவை உள்ளது என்பதை பட்டியலிட்டு பேசியுள்ளேன். குறிப்பாக பள்ளிக்கல்வித் துறையில் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய எஸ்எஸ்ஏ நிதி, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தல், சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

செங்கல்பட்டு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிப்பெயர் விகுதிகளை மாற்றுவது, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகளை மீட்பது போன்ற கோரிக்கை வைத்துள்ளேன்.

நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அங்கேயே அவர் 5 நிமிடம் நேரம் அளித்தார். அதை பயன்படுத்தி அப்போது இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள்:

பிரதமர் என்ன பதில் தெரிவித்தார்?

அவர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம்.

தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கை வைத்து வந்தாலும், சட்டப்போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது. தற்போது நம்பிக்கை உள்ளதா?

ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார். அதை நினைவுபடுத்தி நன்றி கூறியபோது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது கோரியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

தமிழகம் கோரிய கல்வி நிதி கிடைக்குமா?

நம்பிக்கையுடன் இருப்போம்.

அமலாக்கத் துறை மீதான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நீதிபதி நியாயமான தீர்ப்பைதான் தான் கூறியுள்ளார்.

பல மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அமலாக்கத் துறையால் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறதே?

இது அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமா அப்படி சந்திப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் டெல்லி வந்ததை விமர்சித்துள்ளாரே?

பழனிசாமி நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை.

சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதேநேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சொல்லி வருகிறார்களே?

அதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். துறை அமைச்சர்கள் இவற்றை எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x