

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த இரு தினங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 456 நிவாரண முகாம்களையும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. அனைத்து அரசுத் துறை அதிகாரிகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 197 பேரிடர் கால நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழைக்கால பேரிடர் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ, 0423-2450034 மற்றும் 2450035 ஆகிய எண்களையோ மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் பிரதீஸ் தலைமையில் 30 பேர் ஊட்டி வந்துள்ளனர். இவர்கள், மழை பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ஊட்டி, பந்தலூர், கூடலூர் பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். தேவைப்படும்பட்சத்தில் கோவையில் இருந்தும் பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.