குடும்ப பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து: பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு

குடும்ப பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து: பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
Updated on
1 min read

சென்னை: குடும்பப் பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்த காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த வி.சகாய பிரவீன் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

குடும்ப பிரச்சினை காரணமாக எனது மனைவி மேரி மெர்சி பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவியின் உறவினரான செங்கல்பட்டு காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, கடந்த 2020-ம் ஆண்டு என்னையும் எனது குடும்பத்தையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, எனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மனைவியிடம் கொடுத்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டார்.

சாவியை ஒப்படைக்க மறுத்த போது, என்னை மனைவி குடும்பத்தினர் முன் அடித்து, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், "பாதிக்கப்பட்ட சகாய பிரவீனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை ஆய்வாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது உத்தரவில் பரிந்துரைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in