திண்டுக்கல்லில் பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில்  மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் பேசினார்.
திண்டுக்கல்லில் பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில்  மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் பேசினார்.

“தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி...” - கேசவவிநாயகம்

Published on

திண்டுக்கல்: “தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது,” என பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் பேசினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று (மே 23) திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் பேசியது: “மாவட்ட அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியின் வெற்றிக்கு அழகே தேர்தலில் வெற்றி பெறுவதுதான்.

ஒரு காலத்தில் பாஜக கை ஊன்ற முடியாது, கால் ஊன்ற முடியாது, கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை என்று பேசியவர்கள் மத்தியில் இன்று பாஜக வளர்ந்துள்ளது. தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக மிகப் பெரிய சக்திவாய்ந்த கட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய வளர்ச்சி பெறவேண்டும்.

அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் வலிமையாக இருக்கவேண்டும். 2026 ஜூன் வரை நமது ஒவ்வொருவரின் நாடி, நரம்பு, ரோமங்கள் கூட தேர்தல் வெற்றியை நோக்கித்தான் இருக்க வேண்டும்,” என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கப்பெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன், அதிமுக அம்மாபேரவை மாநில துணைச்செயலாளர் கண்ணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in