

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், குற்றச்சாட்டுப்பதிவு நடைமுறை நடத்தாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த முறை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இன்று (மே 23) அன்று குற்றச்சாட்டுப்பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டாலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, நீதிபதி வேங்கடவரதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன் கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும்,” என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடத்தப்படாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.