கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி ஆய்வு: விரைவாக முடிக்க அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி ஆய்வு: விரைவாக முடிக்க அமைச்சர் வேலு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அரசு சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிமீ நீளத்திற்கு ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கிமீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இப்பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தேர் செல்வதற்கான வழிகளையும், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை விரிவாக்கப் பணிகளையும் களஆய்வு செய்தார்.

கிழக்கு கடற்கரை சாலையில் 2 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் ஆய்வு செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது,துறை செயலர் இரா.செல்வராஜ், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in