

சென்னை: திமுக பிரமுகரான தெய்வச்செயல் மீது ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த அவரது மனைவி, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் தெய்வா என்ற தெய்வச்செயல்(40). அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இவர், அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ப்ரீத்தி(21) என்பவரை கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் அரக்கோணத்தில் வசித்து வந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் ப்ரீத்தி, கணவர் மீது புகார் அளித்தார். அதில், தெய்வா ஏற்கெனவே திருமணமானவர் என்றும், பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தி, சில திமுக நிர்வாகிகளின் விருப்பத்துக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், தனது புகார் மீது போலீஸார் முறையான விசாரணை நடத்தவில்லை என்று, ப்ரீத்தி குற்றம்சாட்டினார். இதுஒருபுறம் இருக்க தெய்வாவை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக அறிவித்தது. இந்நிலையில், ப்ரீத்திக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுஒருபுறம் இருக்க அரக்கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், கணவரால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவி ப்ரீத்தி நேற்று, தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிக்க கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். வந்தவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள், 'ஆளுநர் தற்போது இல்லை. எனவே, உங்களது புகார் மனுவை ஆன்லைன் வாயிலாக ஆளுநருக்கு அனுப்பி வையுங்கள்' என கூறினர். இதற்கிடையில், அங்கு வந்த போலீஸார் அவரை உடனடியாக அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால், போலீஸாருடன் ப்ரீத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.