Published : 23 May 2025 05:07 AM
Last Updated : 23 May 2025 05:07 AM
திருநெல்வேலி / ராஜபாளையம்: திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வெள்ளித் தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையாவிடம், நயினார் நாகேந்திரன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தராகண்ட் மாநில முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றிணைந்து, பாஜக கூட்டணியில் தொடர வேண்டும். அவர்களது பிரச்சினையின் பின்னணியில் பாஜக இல்லை.
தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். பாஜக-அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.
கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கும் திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்றால், அடுத்து வரும் எங்களது ஆட்சியில் அத்திட்டம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்ப்புகள் இருக்கும். நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள், சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டாசு தொழில்... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "தமிழக காவல் துறைப் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து கருத்துகூற இயலாது. சிவகாசி பட்டாசுத் தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். விசைத்தறித் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதல்வரும், கைத்தறித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT