Published : 23 May 2025 05:01 AM
Last Updated : 23 May 2025 05:01 AM
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 13,606 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழித்தடம் உள்ளிட்டவை குறித்து சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் வலது கரையில் தண்ணீர் திறப்பு விழாவுக்காக மேடை அமைக்கப்பட உள்ள இடம், மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் இடம், அணைப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், கோட்டாட்சியர் சுகுமார், வட்டாட்சியர் ரமேஷ், டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நகராட்சி ஆணையர் நித்யா, உதவிப் பொறியாளர் சதிஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,819 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 13,606 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் 110.03 அடியில் இருந்து 110.77 அடியாகவும், நீர் இருப்பு 78.45 டிஎம்சியிலிருந்து 79.60 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 9 அடி நிரம்ப வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT