தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக மாற்றம்; நல்ல திட்டத்தை தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்த கூடாது: ஐகோர்ட்

தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக மாற்றம்; நல்ல திட்டத்தை தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்த கூடாது: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை தனி்ப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், துாய்மைப் பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டப்பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் முக்கிய பங்கு உள்ளது.

முறைகேடுகளை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே எனது வீட்டுக்குள் தூய்மைப் பணியாளர் சீருடையில் வந்த சில சமூகவிரோதிகள் கழிவுநீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இத்திட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்திய பிறகே வழக்கில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் அதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்றம் கோரிய திட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தை தனி்ப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது என கருத்து தெரிவித்தனர். பின்னர், இத்திட்டத்தில் தொடர்புடைய தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை, ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் பிறப்பி்த்து விசாரணையை இன்றைக்கு (மே 23) தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in