

சென்னை: அழியும் நிலையில் உள்ள இருவாட்சி பறவைகள், தென்னிந்திய முள்ளெலி, குள்ளநரி உள்ளிட்ட 7 வகையான உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக வனத் துறை, தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் சார்பில் சர்வதேச பல்லுயிர் தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழா மலர் உள்ளிட்டவற்றை வனத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார். அவர் பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் உட்பட மிக முக்கியமான நில பரப்புகள், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் போன்ற கடலோர மற்றும் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தையும் கொண்டுள்ளதால், நாட்டிலேயே பல்லுயிர் பெருக்கத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் பாதுகாப்பு இயக்கம் என முத்தான 3 திட்டங்களை வகுத்து பல்லுயிர் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடற்பசு பாதுகாப்பு மையம், திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம், கன்னியாகுமரி, களக்காடு முண்டந்துறை காடுகளை உள்ளடக்கி அகத்தியர் மலை யானைகள் காப்பகம், ஈரோடு மாவட்டத்தில் காவேரி வன உயிரின சரணாலயம் ஆகியவை அமைக்கப்பட்டு, பல்லுயிர் பாதுகாப்புக்கு ஆதாரமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அழிவின் விளிம்பில் உள்ள இருவாட்சி பறவைகள், தென்னிந்திய முள்ளெலி, நீர்நாய், குள்ளநரி, சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி, செந்துடுப்பு காவேரி மீன் ஆகியவற்றையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வருங்கால தலைமுறையினருக்கு பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவது அவசியம். எனவே, பள்ளி மாணர்களுக்கு பல்லுயிர் பாதுகாக்கும் அறத்தை கற்பிக்கும் விதமாக இயற்கை முகாம்கள் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்லுயிர் பெருக்க சட்ட விதிகளை பாதுகாக்க கீழ்நிலை அளவில் மேலாண்மை குழுக்கள் உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 13,600 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 13,600 பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்லுயிர் பெருக்க சட்டத்தின்கீழ் ரூ.2 கோடி பெறப்பட்டு, மேற்கண்ட குழுக்களுக்கு ரூ.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி வீரகோயில் புனித தோப்பு ஆகியவை தமிழக அரசு சார்பில் பாரம்பரிய பல்லுயிர் பெருக்க தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, ‘இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு’ என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாகு, வனத் துறை தலைவர் சீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன், வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, தலைமை வன பாதுகாவலர் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.