‘புறவாசல் வழியாக அமித் ஷாவை சந்தித்தவர் பழனிசாமி’ - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சனம்

விழுப்புரத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செவ்லம். அருகில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செவ்லம். அருகில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர்.
Updated on
2 min read

விழுப்புரம்: புறவாசல் வழியாக 3 கார்கள் மாறி, பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (மே 22ம் தேதி) மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”அமலாக்கத் துறையின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதிகாரம் வரம்புகளை மீறி, மத்திய அரசின் தூண்டுதல் பேரில், அவர்களது ஆணைக்கு இணங்க அமலாக்கத் துறை பணியாற்றி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கொள்ளை புறமாக திமுக அரசு மீது வீண் பழியை சுமத்தி உள்ளனர். 2026-ல் அவர்களை மக்கள் கண்டிப்பார்கள். நல்ல விடிவு காலம் பிறக்கும்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பேசுவது, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தான். இந்த பயணம் எதற்காக என ஊரறிந்த விஷயம். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நமக்கான நிதி உரிமையை கேட்டு பெறுவதற்காக செல்ல உள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற போது, டெல்லிக்கு சென்று, 3 கார்கள் மாறி, பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் பழனிசாமி. புறவாசல் வழியாக சென்றவர்.

சட்டப்பேரவையில் பாஜகவை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தான், தோல்வி அடைந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புலம்பிய மறுவாரமே, பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் பழனிசாமி. இவரை போல் கொள்ளை வாசல் வழியாக முதல்வர் செல்லவில்லை. சார், தம்பி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் தான் பேசுகிறார்கள். இது முருகனுக்குதான் தெரியும். பாமக கூட்டணி என்பது எப்படி வேண்டுமானாலும் அமையும். திமுக தலைமையிலான கூட்டணி நிலையானது, கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது. இக்கூட்டணி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். நெல் மூட்டைகள் பாதுகாக்க குடோன் அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்திர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீர் மழையால், நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இது இயற்கையானது. ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார். வேளாண்மைத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.

டெல்டா பகுதிக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த குறுவை தொகுப்பு திட்டமும், அனைத்து இடங்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு கூடுதலாக விவசாயம் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.” என்று அமைச்சர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது: பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறும்போது, “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சின்னசெவலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சாலை என்ற கிராமத்தில் வேளாண்மை கிடங்கு அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கிடங்கு விரைவில் கட்டப்படும். மேலும், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 16 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று பொன்முடி கூறினார்.

எம்எல்வு-க்கு வாய் பூட்டு: திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பேசப்படுகிறது என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வதிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, ‘தம்பி எவ்வளவு சென்சிட்டிவ்வான மேட்டர் பேசிக் கொண்டிருக்கிறார்’ என குறுக்கிட்டு, தனது கருத்தை வெளிப்படுத்த முயன்றார். உடன் சுதாரித்த அமைச்சர் எம்ஆர்கே மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமைதியாக இருக்குமாறு கூறி, அவருக்கு வாய் பூட்டு போட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in