தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்காக வயல்களை தயார் செய்யும் பணி தீவிரம்

கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் முதல்போக சாகுபடிக்காக வயல்களில் உழவுப்பணி நடைபெற்று வருகிறது
கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் முதல்போக சாகுபடிக்காக வயல்களில் உழவுப்பணி நடைபெற்று வருகிறது
Updated on
1 min read

கம்பம்: முதல்போக நெல் சாகுபடிக்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வயல்களை தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் இரண்டாம் போக சாகுபடி முடிந்தது. இதனைத் தொடர்ந்து சிதறி கிடக்கும் நெல்மணிகள், வைக்கோலை அகற்றுவதற்காக வயல்கள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. வாத்து, ஆடு, மாடுகள் இவற்றை தீவனமாக பயன்படுத்தின.

இந்நிலையில் ஜூன் 1-ல் முல்லை பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆகவே தலைமதகுப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கோடை உழவு செய்திருந்த நிலையில் தற்போது முதல்போகத்துக்காக மீண்டும் உழவுப் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், “கடந்த 3ஆண்டுகளாக தாமதமின்றி ஜூன் 1-ம் தேதியே முதல்போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டும் அதனை எதிர்பார்த்து வயல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், விதைப்புக்காக ஆர்.என்.ஆர் ரக நெல்களை வாங்கி வைத்துள்ளோம். தண்ணீர் திறந்ததும் நாற்றுப்பாவி வயல்களில் நெற்பயிரை நட தொடங்குவோம்,” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in