Published : 22 May 2025 05:45 PM
Last Updated : 22 May 2025 05:45 PM
திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 3 பேர் இறந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் இன்று (மே 22) ஆய்வு செய்தார்.
திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை கடந்த 19-ம் தேதி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30). வேணுகோபால் (31) மற்றும் ஹரி கிருஷ்ணன் (26) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதில் சின்னச்சாமி (36) என்பவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இது தொடர்பாக பல்லடம் போலீஸார் நிறுவன உரிமையாளர் நவீன், மேலாளர் தனபால், கண்காணிப்பாளர் அரவிந்த் (எ) ஜெயா அரவிந்த் மற்றும் ஓட்டுநர் சின்னச்சாமி ஆகிய 4 பேர் மீது, பட்டியலினத்தவர் மனிதக் கழிவை கையால் அள்ளும் தடுப்பு சட்டம், பட்டியல் இன வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாய ஆலையின் மேலாளர் தனபால் (50) மற்றும் கண்காணிப்பாளர் ஜெயா அரவிந்த் (47) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சாய ஆலையின் உரிமையாளர் நவீன் தலைமறைவான நிலையில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் சம்பந்தப்பட்ட சாய ஆலையை இன்று (மே 22) காலை ஆய்வு செய்தார்.
அப்போது ஆலைக்குள் சென்றவர் நேராக 3 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டுவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். சில நிமிடங்களுக்குள் இந்த ஆய்வை முடித்துவிட்டு ஆலையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, திருப்பூர் சுண்டமேடு பகுதியில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஓட்டுநர் சின்னச்சாமியை விடுவிக்க வேண்டும் என்றும், அவரும் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சின்னச்சாமியை நேரில் சந்தித்தார்.
இந்த ஆய்வறிக்கையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையருக்கும், தமிழக அரசுக்கும் அவர் அனுப்பிவைப்பார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியர் சபரி, தெற்கு வட்டாசியர் சரவணன், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT