கோவூர் கோயில் குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்: இரு அமைச்சர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழமத்தின் சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை மேம்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் கோயில் குளம், ஐயப்பந்தாங்கல் பேருந்து நிலையம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்தப் பணிகளுக்கான பூமி பூஜையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இவற்றுடன் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணா தெருவில் புதிய பல் நோக்கு மையம் அமைப்பதற்காக ரூ.9.91 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புத்தூர் சார் ஆட்சியர் மிருணாளினி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை மனோகரன், சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் மா.பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
