தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7-ம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7-ம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி
Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் ஆகியோர் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு நேரில் சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், காந்திநகர், பூபாலராயர்புரம் ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, நாட்டுப் படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி மணிநகரில் உள்ள சங்க அலுவலகம் முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பாத்திமா நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தனது 'எக்ஸ்' தள பதிவில், 'கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்களை தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக சுட்டு வீழ்த்திய கருப்பு தினம். தங்களது உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 13 போராளிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம்.

அவர்கள் மீது துளைத்த துப்பாக்கி குண்டுகளின் வடு இன்னும் நம் மனதிலிருந்து மறையவில்லை, மறக்கவும் செய்யாது' என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in