Published : 22 May 2025 11:06 AM
Last Updated : 22 May 2025 11:06 AM
சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆகையால், ரிசர்வ் வங்கி உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் ஆர்பிஐ கொண்டு வந்தது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்பிஐ உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்பிஐ கட்டுப்பாடுகள் என்னென்ன? >> அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்
>> அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் அதாவது கடன் வாங்குபவர் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
>> தங்கத்தின் தூய்மை தன்மை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சான்றிதழ் வழங்கவேண்டும்.
>> அடகு வைக்கப்படும் தங்கம் 24 காரட்டாக இருந்தாலும் 22 காரட் மதிப்பின் அடிப்படையில்தான் இனி கணக்கிட்டு கடன் வழங்கப்படும்.
>> தனிநபர்கள் இனி ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்கமுடியும்.
>> வாடிக்கையாளர் கடனை திரும்ப செலுத்திய ஏழு நாட்களில் நகையை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதற்கடுத்து தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்க வேண்டும்.
>> ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்படிருக்கும் தங்க நகை வகைகளுக்கு (ஆபரணங்கள், குறிப்பிட்ட வகையிலான தங்கக் காசுகளுக்கு) மட்டுமே கடன் வழங்கப்படும்.
>> தங்க நகைக்கடன் ஒப்பந்தத்தில் அக்கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
>> புதிய விதிமுறையின்படி வெள்ளிப்பொருட்களுக்கும் நகைக்கடன் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT