மழை வாய்ப்பு குறையக்கூடும் என்பதால் தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும்

மழை வாய்ப்பு குறையக்கூடும் என்பதால் தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையும் என்பதால், அடுத்த சில நாட்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அதோடு இணைந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 79 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆற்காடு மாவட்டம் ராணிப்பேட்டையில் 15 செ.மீ., அரக்கோணத்தில் 12 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், வெம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 10 செ.மீ., ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 8 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், எந்த இடத்திலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இல்லாத நிலையில், மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயர்ந்து, 24, 25-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in