Published : 21 May 2025 01:16 PM
Last Updated : 21 May 2025 01:16 PM

விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு

நடிகர் ரவி மோகன்

சென்னை: விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர். ரவி மோகன் விவாகரத்துக் கோரியும், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்பநல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரிய வழக்கு குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும். சேர்ந்து வாழ வேண்டுமென்ற ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என நடிகர் ரவிமோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்த்தி தரப்பில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் எனக் கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x