சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 5 தொழிலாளிகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டையில் பொக்லைன் இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளான தனியார் கல்குவாரி.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டையில் பொக்லைன் இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளான தனியார் கல்குவாரி.
Updated on
1 min read

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் 400 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 400 அடி பள்ளத்தில் 5 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சாய்வுப் பாதை வழியாக பொக்லைன் இயந்திரம் இறங்கியதில் திடீரென கற்கள் சரிந்தன. இதில், பொக்லைன் ஓட்டுநரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் (28), குவாரிக்குள் இருந்த ஓடைப்பட்டி முருகானந்தம் (49), மதுரை மாவட்டம் இ.மலம்பட்டி ஆண்டிச்சாமி (50), ஆறுமுகம் (50), குழிச்சேவல்பட்டி கணேசன் (43), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மைக்கேல் (43) ஆகியோர் பாறைக்குள் சிக்கிக்கொண்டனர். சக தொழிலாளர்கள் முருகானந்தம், ஆறுமுகம், மைக்கேல் ஆகியோரை மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவரும் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி, பாறை இடுக்குகளில் சிக்கியிருந்த ஆண்டிச்சாமி, கணேசன் ஆகியோரது உடல்களை மீட்டனர். பெரிய பாறைக்குள் பொக்லைன் இயந்திரத்தோடு ஓட்டுநர் சிக்கிக்கொண்டதால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து தேசிய மீட்புப் படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே முருகானந்தம், ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்தனர். மைக்கேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நேரிட்ட இடத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஆண்டிச்சாமி, கணேசன் ஆகியோரது உடல்களை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்ட அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் உடல்களை பார்க்க அனுமதிக்க வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் மேகவர்மன் மற்றும் மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளது. இதனால், மண்ணின் ஈரத்தன்மையால் பிடிமானம் இழந்து கற்கள் சரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரூ.4 லட்சம் நிவாரணம்: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்த தகவலைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த மைக்கேலுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in