Published : 21 May 2025 09:33 AM
Last Updated : 21 May 2025 09:33 AM
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 27 ஆண்டு கால கோரிக்கை அரசியல் சதிராட்டத்தால் காலாவதியாகிக் கொண்டே வருவதாக பொதுநல அமைப்புகள் புலம்பித் தீர்க்கின்றன.
2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் முடிந்துள்ள நிலையிலும் அதற்கான சிறு துரும்பும் நகரவில்லை. மாறாக, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது சாத்தியமில்லை என அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த அதிகாரிகள், “புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு 2,500 சதுர கி.மீட்டராவது இருக்க வேண்டும். ஆனால், தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்ப கோணம் கோட்டத்தை பிரித்தால் 940.22 சதுர கி.மீ மட்டுமே வரும். மக்கள் தொகையும் 10 லட்சமாவது இருக்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தின் மக்கள் தொகை 6,39,486 தான்.
ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 5 வட்டங்கள் இருக்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் 3 வட்டங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சம் 2 கோட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்துக்கே 3 கோட்டங்கள் தான் உள்ளது. குறைந்தபட்சம் 200 வருவாய் கிராமங்கள் இருக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர வேறெந்த விதியும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க ஒத்துப்போகவில்லை” என்றார்கள்.
ஆனால், இந்த விதிகளை எல்லாம் புதிதாக கொண்டு வந்து புகுத்துவதாக வேதனைப்படும் கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன், “கலைஞர் ஆட்சியில் திருவாரூர், அரியலூர் போன்ற சிறு நகரங்கள் எல்லாம் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. பழனிசாமி ஆட்சியிலும் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என பல மாவட்டங்களை அறிவித்தார்கள். இவை எதற்குமே இந்த விதிமுறைகளை அளவுகோளாக காட்டவில்லை.
உதாரணத்துக்கு, சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தை அப்படியே புதிய மாவட்டமாக அறிவித்தார்கள். கோட்டாட்சியர் அலுவல கத்தை தவிர வேறெந்த அலுவலகமும் மயிலாடுதுறையில் இல்லை. ஆனால், கலைஞர் முதல்வராக இருந்தபோதே கும்ப கோணத்தில் மாவட்ட தலைநகருக்கு உரிய அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுவிட்டது. மயிலாடுதுறைக்கு வைத்த அளவுகோள் படியே கும்பகோணம் கோட்டத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
அதிமுக ஆட்சியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இருக்கும் நகரங்களை எல்லாம் மாவட்ட தலை நகரங்களாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது கும்பகோணம் திமுக வசம் இருந்ததால் கும்பகோணத்தை ஒதுக்கிவிட்டார்கள். 1991 தேர்தலை தவிர கடந்த அரை நூற்றாண்டாக கும்பகோணத்தில் திமுக தான் ஜெயித்து வருகிறது. அப்படி தொடர்ச்சியாக தங்களுக்கு வாக்களித்து வரும் மக்களுக்கு கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து நன்றிக் கடனை செலுத்த வேண்டாமா திமுக?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து தானும் அமைச்சர் கோவி.செழியனும் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்ததையே போஸ்டரடித்து ஒட்டி மக்களை சமாதானப்படுத்தி இருக்கிறார் தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சாக்கோட்டை க.அன்பழகன், “கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு நன்றி சொல்வதற்காக நானும் அமைச்சர் கோவி. செழியனும் முதல்வரைச் சந்தித்தோம். அப்போது, மாவட்ட பிரிவினையை கும்பகோணம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகஅவரிடம் சொன்னோம். ‘பார்க்கலாம்’ என்று சொன்னார்.
அதிமுக ஆட்சியிலும் இந்தக் கோரிக்கையை நான் வலியுறுத் தினேன். அப்போது வருவாய்த்துறைஅமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார், ‘பரிசீலிக்கப்படும்’ என்று சட்டமன்றத்திலேயே தெரிவித்தார். ஆக, கும்பகோணம் தனி மாவட்டம் வராது என யாரும் மறுக்க வில்லை. அதனால் நிச்சயம் கும்பகோணம் தனி மாவட்டமாக வந்தே தீரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT