திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 3 பேர் உயிரிழப்பு: என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் அருகே மழையால் இடிந்து விழுந்த அம்மாபிள்ளை வீட்டு  திண்ணையின் மேற்கூரை. (உள்படம்) அம்மாபிள்ளை, வெங்கட்டி, வீரமணி
மதுரை திருப்பரங்குன்றம் அருகே மழையால் இடிந்து விழுந்த அம்மாபிள்ளை வீட்டு திண்ணையின் மேற்கூரை. (உள்படம்) அம்மாபிள்ளை, வெங்கட்டி, வீரமணி
Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீட்டு திண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

அப்போது, முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்மாபிள்ளை (65), அவரது பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரணன் மனைவி வெங்கட்டி (55) ஆகியோர் அம்மாபிள்ளையின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக திண்ணையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு, வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு வெங்கட்டி உயிரிழந்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அம்மாபிள்ளை, வீரமணி ஆகியோர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, "வலையங்குளம் பகுதியில் மழை பெய்தபோது, மின்தடை இருந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in