திமுக கூட்டணியில் இணைய பாமகவுக்கு வாய்ப்பே இல்லை: கே.பாலகிருஷ்ணன் கருத்து

திமுக கூட்டணியில் இணைய பாமகவுக்கு வாய்ப்பே இல்லை: கே.பாலகிருஷ்ணன் கருத்து
Updated on
1 min read

நாகப்பட்டினம்: திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

நாகையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 6 மாதமாகிவிட்டதால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நடத்தினால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும்.

வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளுக்கு நாள் மக்களின் வருமானம் குறைந்து கொண்டுள்ள நிலையில், கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனால், அவர்கள் மின்சாரத்தை எப்படி பயன்படுத்த இயலும்?.

மின் வாரியம் தன்னுடைய சொந்த மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடாது. மின்சார வாரியத்தின் மொத்த வரவு செலவில் 60 சதவீதம் தனியாருக்கு செல்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமே தவிர, மின் கட்டணத்தை உயர்த்த கூடாது.

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே இந்தக் கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in