தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
Updated on
1 min read

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாளை (மே 22) காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

ரயில்வேயில் ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெறுகின்றன. அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, திருசூலம், குரோம்பேட்டை உட்பட 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை ராஜஸ்தானில் இருந்து பிரதமர் மோடி நாளை (மே 22) காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில், தெற்கு ரயில்வேயில், மேம்படுத்தப்பட்டுள்ள பரங்கிமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருவண்ணாமலை, போளூர், சிதம்பரம், ஸ்ரீரங்கம், மன்னார்குடி, விருத்தாசலம், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை, கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா, திருவனந்தபுரம் மாவட்டம் சிராயின்கீழ், புதுச்சேரியில் மாஹே ஆகிய 13 ரயில்நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 13 ரயில் நிலையங்களை பயணிகளின் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மின்தூக்கி, நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in