

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது 12 பேர் கரோனா சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள கரோனா சூழல் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “புதுச்சேரியில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கரோனா பாதிப்புகளுடன் ஓரிருவர் சிகிச்சைக்கு சில நாட்களாக வந்து வீட்டுக்கும் அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் முதல், புற நோயாளிகளுக்கு டெங்கு, சிக்குன் குனியா, கரோனா பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இதன்படி 20 பேர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் ஆரம்ப சிகிச்சையிலேயே குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 12 பேர் தற்போது தனி வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா பாதிப்பு அறிவுரைகள் ஏதும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை .
காய்ச்சல், சளி எனில் அச்சப்பட தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் உடனே சரியாகிவிடும். அத்துடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிடவேண்டும். சளி உள்ளவர்கள் இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால் முகக்கவசம் அணியவேண்டும்” என்று குறிப்பிட்டார்.