Last Updated : 20 May, 2025 02:33 PM

11  

Published : 20 May 2025 02:33 PM
Last Updated : 20 May 2025 02:33 PM

''வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை'' - மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் | கோப்புப் படம்

சென்னை: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு சலசலப்பு ஏன்? - தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 2022-ல் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மேலும், 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024-ம் ஆண்டு 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, 3.16 சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இந்தக் கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மின்கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு இருப்பதால், 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்றனர். இந்தப் பின்னணியில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x