

சென்னை: தமிழக அரசு அமல்படுத்த இருக்கும் மின்கண்டன உயர்வு மக்களுக்கு மு.க. ஸ்டாலின் கொடுக்கும் மற்றுமொரு பரிசு என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் யுவராஜா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் 3.16 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும். மின் கட்டண உயர்வு என்பது சாதாரண உயர்வு அல்ல; இது ஏற்க முடியாத ஒன்று. மக்கள் அன்றாட வாழ்க்கை செலவுகளை சந்திக்கவே இன்று பெரும் பாடுபடுகிறார்கள். இதை புரிந்துகொள்ளாமல், திறனற்ற திராவிட மாடல் அரசு மின் கட்டணத்தை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் விரோத செயலாகும். இது நிர்வாக பிழையும், பொறுப்பற்ற அரசியல் செயலும்.
தேர்தலுக்கு முன் மக்கள் நலன் பேசியவர்கள் இன்று மக்களின் முதுகில் குத்துகிறார்கள். ஜனநாயகத்தின் பெயரில் மக்களை சுரண்டும் செயல்கள் தொடர்ந்தால் மக்கள் தகுந்த பாடத்தை உங்களுக்கு விரைவில் புகட்டுவார்கள். அரசு உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெற்றே ஆக வேண்டும் – இல்லையெனில் இந்த மக்கள் விரோத ஆட்சிக்குத் தண்டனை அளிக்கும் காலம் மிக விரைவில் வரும்.
தமிழக மின் வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், வழக்கம் போல் இந்த திறனற்ற திராவிட மாடல் அரசின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று. மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் வாரியம் லாபத்தில் இயங்கும் என்பது உண்மையல்ல. மின் வாரியத்தின் இழப்புக்குக் காரணம், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதுதான்.
அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலத்தில் மக்களை எந்த வகையில் ஏமாற்றலாம்? எந்த வகையில் அவர்களை நிம்மதி இல்லாமல் வாழ வைக்கலாம்? என்ற வித்தையை ஸ்டாலின் தெரிந்து வைத்துள்ளார்.
நடைமுறைக்கு வரவுள்ள புதிய மின் கட்டணம் (1.7.2025 முதல் உயர்த்தப்படும்) கணக்கிடும் முறை.
500 யூனிட்க்கு கீழ்:
500 யுனிட்க்கு மேல்
1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ரூ.11 கட்டணம். நிலைக் கட்டணம், அட்வான்ஸ் தனி. 500 யூனிட்டிற்கும், 510 யூனிட்டிற்க்கும் வித்யாசம் ரூ.305 ஆகிறது. ஒரு யூனிட்க்கு கட்டணமும் ரூ. 8,9,10,11 என கூடுகிறது. மிக பெரிய மின் வாரிய சுரண்டல். தற்போதைய TNEB மின் கட்டணம்: 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ. 1330. 501 யூனிட் பயன்படுத்தினால் ரூ.2127. 1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.
நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், ரூ.5,420 செலுத்த வேண்டும். ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1,330/- மட்டுமே செலுத்த வேண்டும். எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2,660 மட்டுமே. இரண்டு மாதங்களுக்கு ரூ.2,760 சேமிக்க முடியும். மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர வேண்டும். பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.
மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு, 500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330. அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட்) அப்போது கட்டணம் ரூ.2,127. ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.
யோசித்துப் பாருங்கள்.... நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று..? ஆக ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நமது மின்சார கட்டணம் குறையும். மேலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29-ம் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31 ஆம் தேதி வந்தால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வரவாய்ப்பு உள்ளது.
விடியலை தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்துவிட்டு நாட்டை இருளில் தள்ளிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசே மக்களின் நலனில் இனியாவது அக்கறை கொண்டு ஜூலை மாதம் முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் யுவராஜா தெரிவத்துள்ளார்.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.