‘ஏனோ தானோ’ தூர் வாரும் பணிகள் - காவிரி டெல்டா விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூர் அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் செல்லும் வாழைப்பூ வடிகால் வாய்க்காலில் நடைபெற்ற தூர் வாரும் பணி.  | படம்: ஆர்.வெங்கடேஷ் |
தஞ்சாவூர் அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் செல்லும் வாழைப்பூ வடிகால் வாய்க்காலில் நடைபெற்ற தூர் வாரும் பணி. | படம்: ஆர்.வெங்கடேஷ் |
Updated on
2 min read

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு தூர் வாரும் பணிகளை கண்காணிக்க இதுவரை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படாததால், இந்தப் பணிகள் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்று வருவதாக ஆதங்கம் தெரிவிக்கும் விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களின் பழைய அகலத்தை குறைக்காமல் தூர் வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதற்கு முன்னதாக ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வாருவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பு தூர் வாரும் பணிகளை அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி, நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

70 சதவீத பணிகள் நிறைவு: இதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த சிறப்பு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்த பணிகளில் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவை தூர் வாரப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து நீர்வளத் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 70 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த தூர் வாரும் பணிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் ஐஏஎஸ் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நியமிக்கப்படவில்லை.

அதேநேரத்தில் தூர் வாரும் பணிகள் நடைபெறும்போது, அந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் உள்ளது. அவர்கள் தலைமையில் கண்காணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவாய்த் துறை, வேளாண்மை துறை, விவசாயிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகள் நடைபெற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல வாய்க்கால்கள், வடிகால்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் அகலம் ஆண்டுக்காண்டு குறுகிக் கொண்டே செல்கிறது.

தூர் வாரும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களும், பெயரளவுக்கு தூர் வாரிவிட்டு செல்கின்றனர். இதனால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வயல்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. தூர் வாரும் பணிகளை தொடங்கும் முன், வாய்க்கால்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து, அதன் அடிப்படையில் தூர் வாரினால் நிதியும் விரயமாகாது. வெள்ளக் காலங்களில் பாதிப்பும் குறைவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர்.ரவிசந்தர் கூறியது: தூர் வாரும் பணியை தரமாகவும், முறைகேடு இல்லாமலும் செயல்படுத்த ஏதுவாக, அந்தந்தப் பகுதி விவசாயிகளை கொண்ட ஒரு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை குழுவும் அமைக்கப்படவில்லை், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.

பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் இந்த பணிகள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அனைத்திலும் வாய்க்காலின் நீளம், மதிப்பீடு, ஒப்பந்ததாரர் பெயர் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், வாய்க்காலின் அகலம், ஆழம் ஆகியவை குறிப்பிடப்படவில்லை. ஒரு வாய்க்காலை தூர் வாரினால் 5 ஆண்டுகளுக்கு அதை மீண்டும் தூர்வார முடியாது என்றார்.

நிதியில் முறைகேடு: மேலும், ஏகேஆர்.ரவிசந்தர் கூறியது: வாய்க்காலில் தலைப்பு பகுதியை விட்டுவிட்டு கடைசி பகுதி, இடையில் என பகுதி பகுதியாக பிரித்து தூர் வாரும் போது, மழைக்காலங்களில் இடர்பாடுகள் ஏற்படுவது என்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, வாய்க்கால்களை முழுமையாக தூர் வார வேண்டும். தூர் வார ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடைபெறுவதால், தரமாக, உரிய அளவீட்டின் படி தூர் வார வேண்டும் என்றார்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியது: தூர் வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். ஒரு சில இடங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் மேற்பார்வையில் தான், தூர் வாரப்படுகிறது. விரைவில் கண்காணிப்பு அலுவலர்கள் வந்து பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். தூர் வாரும் பணிகள் தொடர்பாக தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அதில் உரிய தகவலும் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in