Published : 20 May 2025 06:15 AM
Last Updated : 20 May 2025 06:15 AM
சென்னை: போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்தார்.
வந்தவர் திடீரென மறைத்து வைத்திருந்த ‘பிளாஸ்க்கை’ திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்து வேப்பேரி போலீஸார் வந்து அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்னதாக அப்பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியாசர்பாடியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது வீட்டுக்கு 2 போலீஸார் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கின்றனர். எனது கணவர் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு உள்ளது. மீண்டும் கஞ்சா வழக்கு போட முயற்சிக்கிறார்கள். இரவு நேரத்தில் கூட வந்து கதவை தட்டுகின்றனர். இதுதொடர்பாக, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
எனது கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். போலீஸார் வீட்டுக்கு வந்து அடிக்கடி விசாரிப்பதால், குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது. அவர்களால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக புகார் மனு கொடுக்கும் படியும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT