Published : 20 May 2025 06:10 AM
Last Updated : 20 May 2025 06:10 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 13 நாட்களில் 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மே 7-ம் தேதி தொடங்கப்பட்டது. திங்கட்கிழமை (மே 19) மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

இதில் 46,691 மாணவர்கள், 75,959 மாணவிகள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 698 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 27-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழகம் முழுவதும் 165 உதவி மையங்கள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் (Admission Facilitation Centre) நிறுவப்பட்டுள்ளன. அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x